×

கர்நாடகாவில் விளைச்சல் பாதிப்பால் ஏற்காடு காபி கொட்டைக்கு திடீர் மவுசு

*மூட்டைக்கு ₹2,800 அதிகரிப்பு

ஏற்காடு : கர்நாடகாவில் விளைச்சல் பாதித்த நிலையில், ஏற்காடு காபி கொட்டைக்கு திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது. ஒரே மாதத்தில், மூட்டைக்கு ₹2800 அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவில் 75 சதவீதம் கர்நாடகாவிலும், 20 சதவீதம் கேரளாவிலும், 5 சதவீதம் தமிழகத்திலும் காபி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டிக்கு அடுத்தபடியாக, சேலம் மாவட்டம், ஏற்காட்டில் தான் காபி பயிரிடப்படுகிறது.

தமிழகத்தில் 35,600 ஹெக்டரில் காபி பயிரிடப்படுகிறது. இதில் அராபிகா வகை பயிர் 29,338 ஹெக்டேரிலும், ரோபாஸ்டா வகை 6,314 ஹெக்டேரிலும் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் சராசரியாக 14,450 டன் அராபிகா, 5,590 டன் ரோபாஸ்டா காபிகொட்டை விளைச்சல் கிடைக்கிறது. ஏற்காட்டில் 5,800 ஹெக்டேர் நிலப்பரப்பில் காபி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அராபிகா வகை காபி பயிர் தான், அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

வாசனை மற்றும் திடம் காரணமாக எப்போதுமே அராபிகா காபிக்கு அதிக மவுசு உள்ளது. கடந்த மாதத்தில் 50 கிலோ மூட்டை கொண்ட அராபிகா காபி கொட்டை, ₹13 ஆயிரம் முதல் ₹13,500 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது மூட்டை ₹15,800 முதல் ₹16,400 வரை விற்பனை செய்யப்படுகிறது. ரோபாஸ்டா வகை காபி ₹10 ஆயிரம் முதல் ₹10,800 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் விலை உயர்ந்துள்ளது.

ஏற்காட்டில் பெய்த தொடர் மழையால், பூ பூப்பது பாதித்தது. இதனால் நடப்பாண்டு எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை. அதே வேளையில், கர்நாடகாவிலும் காபி விளைச்சல் பாதித்துள்ளது. இதனால் ஏற்காடு காபிக்கு மவுசு கூடி, விலையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக காபி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஏற்காட்டில் 120க்கும் மேற்பட்ட காபி தோட்டங்கள் உள்ளன.

இங்கு சேர்வராயன் மலைப்பகுதியில் நாகலூர், மஞ்சக்குட்டை, கொம்மக்காடு, செம்மநத்தம், காவேரிபீக், கொட்டச்சேடு, தலைச்சோலை உள்பட பல கிராமங்களில் காபி அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஓராண்டு பயிரான காபி ஒவ்வொரு ஆண்டும், மே மாதத்தில் விளைவிக்கப்படும். இவை செப்டம்பர், அக்டோபரில் பூ பூத்து நவம்பர், டிசம்பரில் அறுவடைக்கு தயாராகும். மற்ற கால கட்டங்களில் களை எடுத்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகள் நடக்கும். ஏற்காட்டில் ஆண்டுக்கு 3 ஆயிரம் டன் காபிகொட்டை உற்பத்தியாகிறது.

ஏற்காடு காபிகொட்டை ஜெர்மனி, அமெரிக்கா, ஐரேப்பியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தோட்டங்களில் காபி பயிர் மட்டுமின்றி ஊடுபயிராக மிளகு, பேரிக்காய், கமலா ஆரஞ்சு மற்றும் சில்வர் ஓக் மரங்கள் வளர்க்கப்படுகிறது. இது குறித்து காபி விவசாயிகள் கூறுகையில், ‘ஏற்காட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு கிலோ காபிகொட்டை ₹240 முதல் ₹260 வரை விற்பனை செய்யப்பட்டது.

நடப்பாண்டு கர்நாடகாவில் காபி கொட்டை விளைச்சல் பாதித்துள்ளதால், ஏற்காடு காபி கொட்டைக்கு மவுசு கூடியுள்ளது. கடந்த ஒரு மாதமாக வியாபாரிகள் ஏற்காட்டுக்கு படையெடுத்து, போட்டி போட்டுக்கொண்டு, காபிக்கொட்டையை ஏலம் எடுக்கின்றனர். தேவை அதிகரிப்பால், காபி கொட்டை விலையும் அதிகரித்துள்ளது. ஒரு மாதத்தில் ஒரு கிலோ காபி கொட்டைக்கு ₹80 அதிகரித்து ₹360க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.

The post கர்நாடகாவில் விளைச்சல் பாதிப்பால் ஏற்காடு காபி கொட்டைக்கு திடீர் மவுசு appeared first on Dinakaran.

Tags : Yercaud ,Karnataka ,India ,Kerala ,Dinakaran ,
× RELATED ஏற்காடு விபத்து: காயம் அடைந்தோருக்கு இபிஎஸ் ஆறுதல்